சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் கேப்டன்; விஜயகாந்துக்கு மோடி புகழஞ்சலி
செய்தி முன்னோட்டம்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் கேப்டன் என்று கூறி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினார்.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.
அதன் பின்னர், திருச்சி விமான நிலையத்தில் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, புதிய முனையத்தை திறந்து வைத்தார்.
இரு நிகழ்ச்சிகளிலும், தமிழக முதல்வர் அவருடன் கலந்து கொண்டார். அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும், இருவரும் ஒரே மேடையில் இடம் பெற்றது கவனம் ஈர்த்தது.
திருச்சி விமான நிலைய நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி விஜயகாந்தை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினார்.
PM Modi paying tributes to Captain Vijakanth
விஜயகாந்த் குறித்து பிரதமர் பேசியதன் முழு விபரம்
பிரதமர் மோடி தனது உரையில், "சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்தை இழந்தோம். அவர் சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் கேப்டனாக இருந்தவர்.
சினிமாவில் தனது பணி மூலம் மக்களின் மனதைக் கொள்ளை கொண்டவர். அரசியல்வாதியாக எப்போதும் தேசிய ரீதியில் சிந்தித்தவர்.
அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்பதாகக் கூறிய பிரதமர் மோடி, இந்த நேரத்தில் மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்துள்ளதாகக் கூறினார்.
தொடர்ந்து, இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்எஸ் ஸ்வாமிநாதன் கடந்த செப்டம்பரில் மறைந்த நிலையில், அவருக்கும் அஞ்சலி செலுத்தினார்.