சிறையிலிருந்து வெளிவந்த 660 சிறைவாசிகளுக்கு உதவித்தொகை வழங்கினார் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகளின் துறையின் சார்பில் இன்று(மே.,5) நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளினை முன்னிட்டு பொது மன்னிப்பில் சிறையிலிருந்து முன்னதாக விடுதலை செய்யப்பட்ட 660 முன்னாள் சிறைவாசிகளுக்கு தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கத்தின் சார்பில் சுயத்தொழில் துவங்க 3 கோடியே 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கிடும் அடையாளமாக 10 முன்னாள் சிறைவாசிகளுக்கு காசோலைகளை வழங்கினார். இதன் மூலம் விடுதலை செய்யப்பட்ட 660 சிறைவாசிகள் சுயதொழில் செய்து அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தி, சீரிய மறுவாழ்வு பெற்று மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடாமல் சமூகத்தில் புதிய வாழ்க்கையினை துவங்க வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் 1921ம் ஆண்டில் துவங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை அமைச்சர் ரகுபதி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட உயரதிகாரிகள், உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்தியாவின் சிறைக்குழுவின் பரிந்துரைக்கிணங்க தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம், அலுவல் சாரா நிறுவனமாக 1921ம் ஆண்டு துவங்கப்பட்டது. சிறையிலிருந்து வெளிவந்த நபர்களின் நல்வாழ்விற்காக, அவர்கள் சமூகத்தில் நேர்மையாக வாழ வழிவகை செய்யும் வகையில், மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுக்க தேவையான நிதி உதவிகளை வழங்கவே இந்த சங்கத்தின் குறிக்கோளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.