தீவிரப்படுத்தப்படும் வெற்றி துரைசாமி உடலின் தேடல்; வெளியான அதிர்ச்சி தகவல்
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன், வெற்றி துரைசாமியின் உடலை தேடும் பணி முடுக்கப்பட்டுள்ளது. தனது நண்பர் கோபிநாத் என்பவருடன் ஹிமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற வெற்றி துரைசாமி பயணம் செய்த கார் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி விபத்திற்குள்ளானது. காசாங் நாலா தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது, அந்த காரின் ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால், நிலைகுலைந்த கார், மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், கோபிநாத் படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், காரில் பயணம் செய்த வெற்றி துரைசாமியின் நிலை என்ன என்பது இன்று வரை தெரியவில்லை.
மீட்கப்பட்ட மனித பாகங்கள்
இந்த நிலையில், மகனை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு, ரூ. 1 கோடி வழங்கப்படும் என்று சைதை துரைசாமி நேற்று அறிவித்தார். இந்த நிலையில், தீவிர தேடுதல் வேட்டையில் இந்திய விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் தான், ஆற்றங்கரையில் இருந்து மனித உடலின் சில பகுதிகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவை காணாமல் போன வெற்றி துரைசாமியின் உடல் பாகமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். மகன் காணாமல் போன தகவல் அறிந்ததும், சைதை துரைசாமி ஹிமாச்சல பிரதேசத்திற்கு விரைந்துள்ளார்.