காணாமல் போன கணவர்; கண்ணீர் விட்டுக் கதறிய மனைவி; கடைசியில் ட்விஸ்ட்
ஆகஸ்ட் 4 முதல் காணாமல் போன தனது கணவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு கண்ணீர் மல்க பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த வாரம் சமூக ஊடகங்களில் கெஞ்சிய நிலையில், அவரது கணவர் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 4 அன்று ஏடிஎம்மிற்கு செல்வதாக கூறி வெளியே சென்ற தகவல் தொழில்நுட்ப ஊழியரான அந்த நபர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி காவல்துறையில் புகார் அளித்ததோடு, சமூக ஊடக பக்கங்களில் தனது கணவரைக் கண்டுபிடித்துத் தருமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருந்தார். இதைப் பார்த்து பலரும் சோகத்தை பகிர்ந்துகொண்ட நிலையில், அந்த நபர் வேண்டுமென்றே காணாமல் போயுள்ள தகவல் தெரிய வந்துள்ளது.
நொய்டாவில் வைத்து கணவரை கண்டுபிடித்த காவல்துறை
காவல்துறை அவரை தீவிரமாக தேடிய நிலையில் மொபைல் போன் அணைக்கப்பட்டதால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், நொய்டாவில் தனது பழைய சிம் கார்டை எறிந்துவிட்டு புதிய சிம் கார்டு வாங்கி பழைய போனில் பயன்படுத்த ஆரம்பித்ததால், காவல்துறைக்கு அவர் இருக்கும் இடம் தெரிய வந்து, அவரை கண்டுபிடித்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்தியதில், மனைவியின் கொடுமை தாங்க முடியாததால், வேண்டுமென்றே வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, காவல்துறையிடம் சிக்கிய அந்த நபர், "என்னை சிறையில்கூட அடைத்து விடுங்கள், நான் அங்கேயே இருந்துகொள்கிறேன். ஆனால் மனைவியுடன் திரும்ப சேர்ந்து வாழ முடியாது." எனக் கூறி, மனைவி தன்னை துன்புறுத்துவதாக கண்ணீர் மல்க கதறியுள்ளார்.