பிபிசியை தடை செய்ய கோரிய மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
2002 குஜராத் மத கலவரத்தின் போது குஜராத்தின் முதலைமச்சராக இருந்த பிரதமர் மோடி பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டதற்காக பிபிசியை மொத்தமாக இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இந்தியாவில் செயல்படும் பிபிசி ஒளிபரப்பு நிறுவனத்தை தடை செய்யக் கோரிய இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தாவின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், "ஒரு ஆவணப்படம் நாட்டை எவ்வாறு பாதிக்கும்" என்று கேள்வி எழுப்பி உள்ளது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிங்கி ஆனந்த், பிபிசி "வேண்டுமென்றே இந்தியாவின் இமேஜை இழிவுபடுத்துகிறது" என்று வாதிட்டார். இந்த ஆவணப்படத்தின் பின்னணியில் உள்ள "சதி" குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த ரிட் மனு முற்றிலும் தவறானது: உச்ச நீதிமன்றம்
இந்த ஆவணப்படம் "இந்தியா மற்றும் அதன் பிரதமரின் உலகளாவிய வளர்ச்சிக்கு எதிரான சதி" என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. "2002 குஜராத் கலவரம் தொடர்பான பிபிசியின் ஆவணப்படம், நரேந்திர மோடிக்கு எதிரான பிரச்சாரத்தின் பிரதிபலிப்பு மட்டுமல்ல, இது இந்தியாவின் சமூக கட்டமைப்பை அழிக்க பிபிசியின் இந்து மதத்திற்கு எதிரான பிரச்சாரமாகும்" என்று இந்த மனு குற்றம் சாட்டியுள்ளது. "உச்சநீதிமன்றம் எப்படி இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்? இந்த ரிட் மனு முற்றிலும் தவறானது. இதற்கு எந்த தகுதியும் இல்லை. அதனால், இது தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்வதற்கு இந்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், இந்திய அரசுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.