திருநெல்வேலி மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
கடந்த 200 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு மாநில தென்மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இம்மாவட்டத்தின் பல பகுதிகள் தனி தீவுகளாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இதர அமைச்சர்கள், கூடுதல் ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். பின்னர் மழைநீர் மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை ஆய்வு செய்த உதயநிதி, செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அப்போது அவர், "திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 3 பேர் மழை, வெள்ளம் காரணமாக உயிரிழந்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
ஸ்ரீ வைகுண்டத்தில் ரயிலில் சிக்கி தவிக்கும் பயணிகளை விமானப்படை ஹெலிகாப்டர்கள் கொண்டு மீட்க நடவடிக்கை
மேலும் அவர், '3500 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளும் தயார் நிலையில் உள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்க படகு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்யும் பணி வெள்ளம் முழுவதும் வடிந்த பின்னரே மேற்கொள்ளப்படும் என்றும், வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களுக்கான நிவாரணத்தொகை குறித்த அறிவிப்பு 3 நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து, ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் ரயிலில் சிக்கி தவிக்கும் பயணிகளை விமானப்படை ஹெலிகாப்டர்கள் கொண்டு மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஹெலிகாப்டர் மூலம் உணவு, குடிநீர் உள்ளிட்டவை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.