கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபு தகவல்
சென்னை கோயம்பேடு பகுதியில் அரசு பேருந்துகளுக்கு என ஒரு தனி பேருந்து நிலையமும், தனியார் பேருந்துகளுக்கு என தனியாக ஒரு பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இதனால் அப்பகுதியில் மிகப்பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால், தனியார் ஆம்னி பேருந்து நிலையத்தினை சென்னை வெளிவட்ட சாலைக்கு மாற்ற சி.எம்.டி.ஏ.அண்மையில் முடிவுச்செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த பேருந்து நிலையமானது கிளம்பாக்கம் அருகே முடிச்சூர் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.29 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இதனை சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, அமைச்சர்கள் சேகர் பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்கள். தொடர்ந்து, இந்த பேருந்துநிலையம் பயன்பாட்டிற்கு வர தாமதமாகலாம் என்று அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையம்
இதுகுறித்து அவர் கூறியதாவது, கிளாம்பாக்கம் வரும் ஆம்னி பேருந்துகளுக்கு தனியாக முடிச்சூரில் பேருந்துநிலையமானது கட்டப்பட்டு வருகிறது. முந்தைய ஆட்சியில் இருந்தோர் இப்பணியினை துவங்கும்போது போதுமான திட்டமிடலை செய்யவில்லை. இந்த பேருந்துநிலையத்திற்கு வரும் பேருந்துகளின் போக்குவரத்தினை கருத்தில்கொள்ளாமல் வடிவமைத்துள்ளார்கள். இது பயன்பாட்டிற்கு வரும் நிலையில், மக்களுக்கான அடிப்படைவசதிகள் எதுவுமே இதன் வடிவமைப்பில் கொண்டுவரப்படவில்லை என்பதை கண்டறிந்தோம். அதனால் இந்த பேருந்துநிலையத்துக்கு வரும் போக்குவரத்து நெரிசலினை சமாளிக்க திட்டமிடல், இப்பேருந்து நிலையத்திற்கான அணுகுச்சாலைகள் ஆகியன குறித்து கணக்கிட்டு ஏற்பாடுச்செய்து வருகிறோம். இதனால் தாமதமாகும் இப்பணி முடிந்தவரை ஜூனில் முடிக்கப்பட்டு, திறக்க முயற்சிக்கிறோம். ஒருவேளை இதன் பணிகள் முடிய ஓரிருவாரங்கள் தள்ளிப்போனாலும் நிச்சயம் இந்த பேருந்துநிலையமானது ஜூலை மாதம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.