மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு போலீஸ்காரர் பலி: 3 பேர் காயம்
மணிப்பூரில் உள்ள மோரே நகரில், இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகில், தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் நேற்று நடத்திய இருவேறு தாக்குதல்களில் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி(SDPO) ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், மூன்று காவலர்கள் புல்லட் காயங்களுடன் தப்பினர். மோரே SDPO சிங்தம் ஆனந்த் குமார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, 'உலக குக்கி-சோ அறிவுசார் கவுன்சிலை'(WKZIC) சட்டவிரோத நடவடிக்கைகள்(தடுப்பு) சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட குழுவாக அறிவிக்க மாநில அரசு பரிந்துரைத்துள்ளது. "31.10.2023அன்று, இம்பாலின் ஹாபாம் மரக் சிங்தாம் லைகையில் வசிக்கும் சப்-டிவிசனல் போலீஸ் அதிகாரி(SDPO) சிங்தம் ஆனந்த் குமார், MPS, துப்புரவுப் பணிகளை மேற்பார்வையிடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆயுதம் ஏந்திய குக்கி மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் வீரமரணம் அடைந்தார்." என்று மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
உண்மையில் என்ன நடந்தது?
இம்பாலில் இருந்து 110 கிமீ தொலைவில் தெங்னௌபால் மாவட்டத்தில் மோரே நகரம் உள்ளது. இது மணிப்பூர்-மியான்மர் எல்லையில் அமைந்திருக்கும் ஒரு வர்த்தக எல்லை நகரமாகும். ஹெலிபேட் அமைப்பதற்காக மோரேவில் உள்ள ஒரு பள்ளியின் மைதானத்தை மாநிலப் படை மற்றும் BSF இணைந்து நேற்று சுத்தம் செய்தனர். இந்த பணியை மேற்பார்வையிடுவதற்கு SDPO சிங்தம் குமார் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் அந்த பணியில் ஈடுபட்டிருந்த போது, ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் அவர் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தினர். அதனால் அவர் உயிரிழந்தார். அதன்பிறகு, மோரேக்கு அனுப்பப்பட்ட ஒரு வலுவூட்டல் குழு இம்பால்-மோரே நெடுஞ்சாலையில் உள்ள போங்ஜாங் மற்றும் சினம் பகுதிகளில் தாக்குதலுக்கு உள்ளானது, இதில் மூன்று போலீஸ்காரர்களுக்கு புல்லட் காயங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.