குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரின் நினைவாக நினைவுச்சின்னம் அமைப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நேர்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவம் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்தோர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய விசாரணை குழு மத்திய அரசால் அமைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி அந்த குழு ஆய்வுச்செய்து அந்த அறிக்கையினை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்'கிடம் ஒப்படைத்தது. எதிர்பாரா வானிலை மாற்றமே இந்த விபத்திற்கு காரணம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
வரும் டிசம்பர் 8ம் தேதி திறக்கப்படவுள்ளது
மேலும் இந்த விபத்து குறித்து குன்னூர் காவல்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. எனினும் இதுவரை இந்த வழக்கின் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தெரிகிறது. இதனிடையே, விபத்து நேர்ந்த இடத்தில் நினைவு சின்னம் அமைக்க கோரிக்கைகள் எழுந்தது. அதன்படி தற்போது அந்த இடத்தில் நினைவு சின்னம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு சின்னத்தில் உயிரிழந்த 14 பேரின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சின்னம் இவர்களது நினைவு தினமான டிசம்பர் 8ம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்த விபத்திற்கான முப்படை விசாரணை குழு, ஏர் ஷீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி மற்றும் ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.