மளிகை வியாபாரியின் மகள் IAS தேர்வில் வெற்றி பெற்ற கதை
செய்தி முன்னோட்டம்
ராஜஸ்தானில் பிறந்து IAS அதிகாரியான ஆயுஷி ஜெயினின் கதை, "மனமிருந்தால் மார்க்கம் உண்டு" என்ற பழமொழிக்கு ஒரு நல்ல சான்றாக இருக்கும்
ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் பிறந்த ஆயுஷி ஜெயின், இரண்டு முறை UPSC தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்.
UPSC தேர்வு விழிப்புணர்வு இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்த ஆயுஷி, IPS பயிற்சியில் இருந்து கொண்டே IAS தேர்விற்கு படித்து வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா.
ஆயுஷி ஜெயினின் தந்தை அஜித் குமார் ஜெயின் ஒரு மளிகை வியாபாரி மற்றும் அவரது தாயார் ஹன்சா ஜெயின் ஒரு இல்லத்தரசி என்பது இன்னொரு ஆச்சர்யமான விஷயமாகும்.
DETAILS
தன்னந்தனியாக UPSC தேர்விற்காக 4 ஆண்டுகள் உழைத்த ஆயுஷி
பன்புரா பள்ளியில் 10ஆம் வகுப்பையும், கோட்டா பள்ளியில் 11-12ஆம் வகுப்புகளையும் முடித்த ஆயுஷி, ஜபல்பூரில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார்.
அதன்பிறகு, அவர் எந்த ஒரு அகடெமிக்கும் செல்லாமல் தன்னந்தனியாக UPSC தேர்விற்காக 4 ஆண்டுகள் உழைத்தார்.
3 முயற்சிகளுக்கு பிறகு, IPS அதிகாரியாக அவருக்கு வேலை கிடைத்தது.
ஆனால், அவரது கனவே IAS அதிகாரி ஆக வேண்டும் என்பது தான். அதனால், ஹைதராபாத்தில் IPS பயிற்சியில் இருந்து கொண்டே அவர் மீண்டும் UPSC தேர்வை எழுதினார்.
2022ஆம் ஆண்டுக்கான UPSC முடிவுகள் சமீபத்தில் வெளியான போது, அவரது கனவு நனவானது.
2021ஆம் ஆண்டு UPSC தேர்வில் 83வது ரேங்க் எடுத்த ஆயுஷி ஜெயின், 2022இல் 74வது ரேங்க் எடுத்தார்.