LOADING...
லட்னிக் கருத்துக்கு இந்தியா பதிலடி! 2025-ல் மட்டும் மோடி - டிரம்ப் 8 முறை பேச்சுவார்த்தை
2025-ல் மட்டும் மோடி - டிரம்ப் 8 முறை பேச்சுவார்த்தை

லட்னிக் கருத்துக்கு இந்தியா பதிலடி! 2025-ல் மட்டும் மோடி - டிரம்ப் 8 முறை பேச்சுவார்த்தை

எழுதியவர் Venkatalakshmi V
Jan 09, 2026
06:18 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தாமதமானது குறித்து அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் வெளியிட்ட கருத்துக்கள் உண்மையல்ல என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி அதிபர் டிரம்பை தொடர்பு கொள்ளாததே ஒப்பந்தம் முடங்கியதற்கு காரணம் என லட்னிக் கூறியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரந்தீர் ஜெய்ஸ்வால், "பிப்ரவரி 13, 2025 முதல் இதற்காகப் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. சில நேரங்களில் ஒப்பந்தத்திற்கு மிக நெருக்கமாக நாம் வந்துள்ளோம். ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் நிலைமையைச் சரியாகச் சித்தரிக்கவில்லை" என்று குறிப்பிட்டார்.

தொடர்பு

பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் இது வரை 8 முறை உரையாடி உள்ளனர்

பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் 2025-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை எட்டு முறை தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளதாக அவர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான பரந்த அளவிலான உறவுகள் மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்கள் விவாதித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இரு தலைவர்களுக்கும் இடையே மிகவும் மரியாதையான மற்றும் நட்புறவான உறவு நீடிப்பதாக தெளிவுபடுத்தினார். முன்னதாக, போட்காஸ்ட் ஒன்றில் பேசிய லட்னிக்,"இந்தியாவுடனான ஒப்பந்தம் முதலில் முடியும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், பிரதமர் மோடி அதிபரை தொடர்பு கொள்ளாததால் இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பந்தங்கள் முதலில் முடிந்தன"என்று கூறியிருந்தார். இதற்கு விளக்கம் அளித்துள்ள இந்தியா, இரு நாடுகளும் தங்களுக்கு பொருத்தமான ஒரு சமநிலையான வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Advertisement