கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் மாசி மக தேரோட்டம்
கும்பகோணத்தில் நடைபெறும் மகாமக விழாவிற்கு சிறப்பு பெற்ற 12 சிவன் கோயில்கள் மற்றும் 5 பெருமாள் கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மகாமகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 25ம் தேதி 6 சிவன் கோயில்களில் கொடியேற்றம் செய்யப்பட்டது, 26ம் தேதி 3 பெருமாள் கோயில்களில் கொடியேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் வீதியுலா வந்து கொண்டிருக்கிறார்கள். இதில் முக்கியமான விழாவான இன்று(மார்ச்.,4) அதிகாலை 5.30 மணி முதல் 6 மணி வரை விநாயகர், முருகர் திருத்தேரோட்டம், 11 மணிக்கு மேல் ஆதிகும்பேஸ்வரர் மங்களாம்பிகையம்மன் என மொத்தம் 4 திருத்தேரோட்டம் நடைபெற்றது என செய்திகள் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபாடு
நடத்தப்பட்ட தேரோட்ட நிகழ்ச்சியில் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், மாநகர துணை மேயர், செயல் அலுவலர் போன்ற அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த தேரோட்டத்தில் வழியில் இருந்த எம்.ஜி.ஆர். உருவ சிலையிலிருந்த விரல் குதிரையின் கால் பட்டு உடைந்தது. இதனால் அங்கு சில நேரம் பரபரப்பு நிலவியது. தேரோட்ட நிகழ்வின் போது, அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க டிஎஸ்பி ஜாபர்சித்திக் தலைமையில் போலீசார், ஊர்காவல் படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நிலையில் மீதமுள்ள 6 சிவன் கோயில்களில் நாளையும், 2 பெருமாள் கோயில்களில் நாளை மறுநாளும் திருத்தேரோட்டங்கள் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.