மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது
டெல்லி மதுபானக் கொள்கையை வடிவமைத்து அமல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை நகர நீதிமன்றம் இன்று(மார் 31) நிராகரித்தது. இதற்கு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக முன்னாள் அமைச்சர் சிசோடியா தெரிவித்துள்ளார். தற்போது நீதிமன்ற காவலில் உள்ள மணீஷ் சிசோடியா, ஏப்ரல் 3 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். வழக்கில் அனைத்து சோதனைகளும் ஏற்கனவே செய்யப்பட்டு விட்டதால், தன்னை காவலில் வைத்திருப்பதில் எந்த பயனும் இல்லை என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா, ஜாமீன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ஆம் ஆத்மியின் குறுக்கீடு அதிகம் இருக்கிறது: சிபிஐ
"அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், அது எங்கள் விசாரணையை சீர்குலைக்கும். ஏனெனில் அவர்களின் செல்வாக்கு மற்றும் குறுக்கீடு பெரிய அளவில் உள்ளது," என்று சிபிஐ எதிர்ப்பு மனுவில் தெரிவித்திருக்கிறது. மதுபானக் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் ஊழல் செய்ததாகக் கூறி பிப்ரவரி 26ஆம் தேதி சிசோடியா சிபிஐயால் கைது செய்யப்பட்டார். அமலாக்க இயக்குனரகமும் (ED) டெல்லி மதுபான ஊழல் தொடர்பாக தனியாக விசாரணையைத் தொடங்கியது. அதனையடுத்து பணமோசடி குற்றச்சாட்டில் மார்ச் 9 அன்று சிசோடியாவை ED கைது செய்தது. அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்த ஆம் ஆத்மி கட்சி, இது எதிர்கட்சிகளை ஒழிக்க நினைக்கும் பாஜகவின் முயற்சி என்று கூறி இருந்தது.