மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக புதிய ஊழல் வழக்கை பதிவு செய்த CBI
டெல்லி அரசின் கருத்துப் பிரிவு(FBU) தொடர்பாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா மீது மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) ஒரு புதிய வழக்கை பதிவு செய்துள்ளது. 2015 ஆம் ஆண்டு டெல்லியில் ஆட்சிக்கு வந்த பிறகு ஆம் ஆத்மி கட்சியால் FBU உருவாக்கப்பட்டது. "சட்டவிரோதமான முறையில் கருத்துப் பிரிவு உருவாக்கப்பட்டு செயல்படுவதால், அரசாங்க கருவூலத்திற்கு தோராயமாக Rs. 36 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது" என்று சிபிஐ கூறியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவருக்கு எதிரான இந்த வழக்கை பற்றி பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "நாட்டை பற்றி நினைத்தால் வருத்தமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
நாட்டை பற்றி நினைத்தால் வருத்தமாக இருக்கிறது: கெஜ்ரிவால்
"மணீஷ் மீது பல பொய் வழக்குகளைப் போட்டு, அவரை நீண்ட காலம் காவலில் வைப்பதே பிரதமரின் திட்டம். நாட்டை பற்றி நினைத்தால் வருத்தமாக இருக்கிறது!" என்று கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், சிசோடியா FBUஐ "அரசியல் சூழ்ச்சிக்கு" ஒரு கருவியாக பயன்படுத்துவதாக சிபிஐ குற்றம் சாட்டி இருந்தது. ரத்து செய்யப்பட்ட டெல்லி மதுபான கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் ஊழல் செய்ததாக டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் சிசோடியா பிப்ரவரி 26 அன்று சிபிஐயால் கைது செய்யப்பட்டார். இந்த குற்றசாட்டுகளை எல்லாம் மறுத்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், இவையெல்லாம் அரசியல் உள்நோக்கத்தோடு செய்யப்படுவதாக பாஜக மீது குற்றம் சாட்டி இருந்தார்.