டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: 7 நாள் ED காவலில் சிசோடியா
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை 7 நாள் காவலில் வைக்க அமலாக்க இயக்குநரகத்திற்கு(ED) டெல்லியில் உள்ள ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று(மார் 10) அனுமதி அளித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி(AAP) தலைமையிலான டெல்லி அரசாங்கத்தின் ரத்து செய்யப்பட்ட 2021-22 டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் சிசோடியாவை விசாரித்த பிறகு அமலாக்கத்துறை வியாழக்கிழமை அன்று அவரை கைது செய்தது. இதே வழக்கில் சிசோடியா மத்திய புலனாய்வுப் பிரிவினரால்(சிபிஐ) கைது செய்யப்பட்டிருந்த நிலையில், திட்டமிடப்பட்ட ஜாமீன் விசாரணைக்கு ஒரு நாள் முன்னதாகவே ED சிசோடியா கைது செய்துள்ளது.
பாஜகவை குற்றம்சாட்டும் ஆம் ஆத்மி
இந்த மதுபான கொள்கை மூலம் ஆம் ஆத்மி அரசு மதுபான வியாபாரிகளுக்கு தேவையற்ற சலுகைகளை வழங்கியதாகவும் அந்த ஊழல் பணத்தை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாகவும் சிபிஐ குற்றம் சாட்டி இருந்தது. இதை எல்லாம் மறுத்த ஆம் ஆத்மி, இது பாஜக எதிர்கட்சிகளை பழிவாங்க எடுத்திருக்கும் நடவடிக்கை என்று குற்றம்சாட்டியது. சிசோடியாவின் காவல் ஏன் அவசியம் என்பதை விளக்கிய ED, இன்று சிறப்பு நீதிமன்றத்தில், டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் ஊழல் செய்யப்பட்ட பணம் எங்கு சென்றிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், ஊழல் செய்யப்பட்ட பணம் குறைந்தது ரூ.292 கோடி இருக்கும் என்றும் ED தெரிவித்துள்ளது.