திகார் சிறைக்கு மாற்றப்பட்டார் சிசோடியா: மார்ச் 20 வரை காவல் நீட்டிப்பு
செய்தி முன்னோட்டம்
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மார்ச் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து திகார் சிறை எண்-1க்கு அவர் இன்று(மார் 6) மாற்றப்பட்டார்.
ஒருவாரக் காவல் முடிவடைந்ததை அடுத்து, மத்தியப் புலனாய்வுப் பிரிவு(CBI) அவரை இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சிசோடியாவை CBI பிப்ரவரி 26 அன்று கைது செய்தது.
ஆம் ஆத்மி கட்சி(AAP) தலைமையிலான டெல்லி அரசாங்கத்தின் ரத்து செய்யப்பட்ட 2021-22 டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக எட்டு மணிநேர விசாரணைக்குப் பிறகு சிசோடியா கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
டெல்லி
கண்ணாடி, பகவத் கீதை, டைரி, பேனா கோரி மனு தாக்கல்
இந்த மதுபான கொள்கை மூலம் ஆம் ஆத்மி அரசு மதுபான வியாபாரிகளுக்கு தேவையற்ற சலுகைகளை வழங்கியதாகவும் அந்த ஊழல் பணத்தை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
விசாரணைக்கு தலைமை தாங்கிய சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பாலிடம் தாங்கள் சிசோடியாவின் காவலை நீட்டிக்கக் கோரவில்லை என்று சிபிஐயின் வழக்கறிஞர் கூறினார். இருப்பினும், அடுத்த 15 நாட்களில் சிசோடியாவின் காவலை மீண்டும் கோரலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
கண்ணாடி, பகவத் கீதை, டைரி, பேனா ஆகியவற்றைக் கோரி சிசோடியா தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் அனுமதித்தது. மேலும், தியான அறையில் வைக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை பரிசீலிக்குமாறு சிறை கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.