மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்திய வீடியோ - ட்விட்டருக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம்
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி என்னும் சமூகத்தினை சேர்ந்தோருக்கு, பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து, குகி பழங்குடியின மக்கள் போராட்டமாக துவங்கிய இந்த கலவரம், கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதனிடையே, குகி பழங்குடியினத்தினை சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு கலவரக்காரர்களால் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு, அப்பெண்களை கூட்டு பலாத்காரம் செய்த கொடூர செயல் அங்கு நிகழ்ந்துள்ள நிலையில், அதன் வீடியோ பதிவு இணையத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், இது போன்ற வீடியோக்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிடக்கூடாது என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்
மேலும், சட்ட ஒழுங்கில் சிக்கல்களை ஏற்படுத்தும் இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டால் ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக, இந்திய அரசின் சட்ட திட்டங்கள்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அந்த வீடியோவினை இணையத்தில் பரவாமல் தடுக்க தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, மணிப்பூர் கலவரத்தில் 2 பெண்களுக்கு நடந்துள்ள இந்த கொடூர நிகழ்வின் வீடியோ பதிவினை நீக்க வேண்டும் என்று கோரி ட்விட்டர் நிறுவனத்திற்கு தேசிய மகளிர் ஆணையம், கடிதம் ஒன்றினை எழுதியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.