மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: மீண்டும் ஊரடங்கு உத்தரவு, என்ன காரணம்?
மணிப்பூரில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜிரிபாம் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 11 பேர் நேற்று (நவம்பர் 11) கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு, குகி-ஜோ கவுன்சில் கடுமையாக கண்டனம் தெரிவித்து, இன்று காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது. இதன் காரணமாக, கடைகள் மூடப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மீண்டும் வன்முறை சம்பவங்கள் தலைத்தூக்கியதால் ஊரடங்கு உத்தரவு
எனினும் இந்த கொலைகளுக்கு எதிராக, இம்பால் மேற்கு மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டங்களில் பல கிராமங்களில் வன்முறை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இம்பால் பள்ளத்தாக்கில் இரு தரப்பினரின் மோதலில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 நாட்களாக, மணிப்பூரின் மலை மற்றும் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில், ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் ஐஇடி வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அசாம் ரைபிள்ஸ் அறிவித்துள்ளது.
காவல் நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்
ஏற்கனவே வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில், இடையில் சில தினங்கள் அமைதி நிலவிய நிலையில், கடந்த 8ம் தேதி ஜிரிபாம் பகுதியில் தீவிரவாதிகள் 6 வீடுகளை தீ வைத்து கொளுத்தினார்கள். மறுநாள், அப்பகுதியில் வேலை செய்து கொண்ட இளம்பெண்ணை சுட்டுக் கொன்றார்கள். பின்னர், ஜிரிபாம் காவல் நிலையத்தைக் குறிவைத்து, குகி பழங்குடியின தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலுக்கான பதிலடி அளித்த போலீசாருடன் சேர்ந்து, சிஆர்பிஎஃப் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த தாக்குதலில், பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்ட்டரில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில், சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் காயமடைந்தனர்.