3 மாதங்களில் 6,500 க்கும் மேற்பட்ட எஃப்ஐஆர்கள், 75 கொலை வழக்குகள்; ஆனால் ஒரு தடயவியல் ஆய்வகம்
மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக வன்முறை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மூன்று மாதங்களில் 6,500 வழக்குகள் பதியப்பட்டுள்ளது, கிட்டத்தட்ட 6 லட்சம் வெடிமருந்துகள் மற்றும் 4,000 ஆயுதங்கள் திருடப்பட்டன, 100 க்கும் மேற்பட்ட இறப்புகள் மற்றும் சுமார் 75 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது. ஆனால், இவையெல்லாவற்றையும் விட, இத்தனை வழக்குகளுக்கும் உதவ, மணிப்பூரில் ஒரே ஒரு தடய அறிவியல் ஆய்வகம் (FSL) உள்ளது. இதனால், வழக்குகள் தேக்கமடைந்துள்ளன என விசாரணை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, அஸ்ஸாமில் ஐந்து பிராந்திய ஆய்வகங்கள் உள்ளன, அதே சமயம் ஒடிசாவில் மூன்று ஆய்வகங்கள் உள்ளன.
பிற மாநிலங்களின் ஆய்வகங்களுக்கு அனுப்ப திட்டம்?
விரைவுபடுத்துவதற்காகவும், உள்ளூர் போலீசார், சேகரிக்கப்பட்ட சாட்சியங்களை மத்திய எஃப்எஸ்எல் மற்றும் பிற மாநிலங்களின் ஆய்வகங்களுக்கு அனுப்புவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகின்றனர். பெரும்பாலான வழக்குகளில் ஆதாரங்களை சேகரிப்பதற்கும் முறையான விசாரணைக்கும் FSL உதவி தேவைப்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். "முக்கியமான வழக்குகள் மத்திய புலனாய்வுப் பிரிவினரிடம் (சிபிஐ) உள்ளன, இது வேறுபட்ட ஆய்வகத்தைக் கொண்டுள்ளது. ஆனால், மணிப்பூர் காவல்துறைக்கு அறிவியல் ஆய்வு மற்றும் விசாரணையின் போது ஆதாரங்களை பகுப்பாய்வு செய்ய FSLகள் தேவை" என மூத்த காவல்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். "வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து, கொலை, கொலை முயற்சி போன்ற முக்கியமானவற்றை முதலில் எஃப்.எஸ்.எல்-க்கு அனுப்புவோம். இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்" என்று அவர் மேலும் கூறினார்