மணிப்பூர் முதலமைச்சரின் கான்வாய் மீது தாக்குதல்: பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயம்
மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங்கின் கான்வாய் மீது காங்போக்பி மாவட்டத்தில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் இன்று பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பாதுகாப்பு அதிகாரி காயமடைந்தார். அவரது கான்வாய் இம்பாலில் இருந்து தேசிய நெடுஞ்சாலை-37 வழியாக ஜிரிபாம் மாவட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, காலை 10.30 மணியளவில் தாக்குதலுக்கு உள்ளானது. ஜூன் 6 ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஒருவரைக் கொன்றதை அடுத்து, ஜிரிபாம் நகரில் கடந்த சில நாட்களாக அமைதியின்மை நிலவுகிறது. இந்நிலையில், ஜிரிபாம் நகரை பார்வையிட மணிப்பூர் முதலமைச்சர் அங்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஜிரிபாம் நகரில் ஒரு நபர் கொல்லப்பட்டது மட்டுமல்லாமல், ஒரு சில அரசாங்க அலுவலகங்கள் உட்பட சுமார் 70 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
239 மெய்தே மக்கள் வெளியேற்றப்பட்டனர்
அதனால், நூற்றுக்கணக்கான குடிமக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினர். மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த ஒரு 59 வயதான விவசாயியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சோய்பம் சரத்குமார் சிங் என அடையாளம் காணப்பட்ட அவர், தனது பண்ணையில் இருந்து திரும்பும் போது காணாமல் போனார். அவரது உடலில் கூர்மையான ஆயுதத்தால் ஏற்படுத்திய காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் மணிப்பூரில் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வரும் இனப் பதற்றத்தை மேலும் அதிகரித்தது. கிட்டத்தட்ட 239 மெய்தே மக்கள், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள், வெள்ளிக்கிழமை (ஜூன் 7) ஜிரிபாமின் புறப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, அந்த மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வளாகங்களில் நிறுவப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.