இரவில் பொறுப்பில்லாமல் காரை ஓட்டிய டிரைவர்.. டெல்லியில் பரபரப்பு!
டெல்லியில் இரவு 11 மணியளவில் பானெட்டில் நபர் ஒருவர் தொங்கிக் கொண்டிருக்க, அவரோடு ரோட்டில் ஓடிய காரால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியின் ஆஷ்ரம் சௌக் முதல் நிஜாமுதீன் தர்கா வரை கார் ஒன்றின் பானெட்டில் நபர் ஒரு கீழே விழும் நிலையில் அபாயகரமாக தொங்கிக் கொண்டிருக்க, அதனைப் பொருட்படுத்தாமல் ஓட்டுநர் காரை ஓட்டியிருக்கிறார். போலீசார் அவரைப் பின்தொடர்ந்து காரை வழிமறித்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தையடுத்து நடைபெற்ற விசாரணையில் அந்தக் காரானது பீகார் லோக் சபா எம்பி சந்தன் சிங்கின் கார் என்றும், அதனை அவரது டிரைவர் ராம்சந்த் குமார் ஓட்டி வந்ததும் தெரியவந்திருக்கிறது.
பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம்:
இது குறித்து பாதிக்கப்பட்ட சேட்டன் பேசும் போது, தான் டிரைவராகப் பணிபுரிவதாகவும், பயணி ஒருவரை இறக்கவிட்டு வரும் வழியில், எம்பி-யின் கார் தன்னுடைய காரின் மீது இடித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இறங்கி எம்பி-யின் காரின் முன்பக்கம் செல்ல, டிரைவர் தன்னைப் பொருட்படுத்தாமல் காரை இயக்கியதாகத், தெரிவித்துள்ளார் அவர். தான் பலமுறை காரை நிறுத்தப் கோரியும், அவர் காரை நிறுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், தான் எதுவும் செய்யவில்லை, பாதிக்கப்பட்டவரே தாமாக தன்னுடைய கார் பானெட்டின் மீது குதித்ததாக கூறியிருக்கிறார் எம்பி-யின் டிரைவர் ராம்சந்த் குமார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ராம்சந்த் குமார் மீது வேகமாகவும், பொறுப்பில்லாமலும் காரை ஓட்டியதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.