'பிரதமரை தேவையில்லாமல் புகழ்ந்து பேசக்கூடாது': காங்கிரஸ் தலைவர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே அறிவுரை
பிரதமர் நரேந்திர மோடிக்கு சத்தீஸ்கர் துணை முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான டிஎஸ் சிங் தியோ பாராட்டு தெரிவித்தது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கோபப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியை தேவையில்லாமல் புகழ்ந்து பேச வேண்டாம் என காங்கிரஸின் CWC குழுவுக்கு கார்கே உத்தரவிட்டுள்ளார். ஒரு நிகழ்ச்சியின் போது பிரதமருடன் மேடையில் பேசிய சத்தீஸ்கர் துணை முதல்வர், "நீங்கள் சத்தீஸ்கருக்கு நிறைய விஷயங்களைக் கொடுத்திருக்கிறீர்கள். மேலும் எனக்கு நம்பிக்கை உள்ளது எதிர்காலத்திலும், நீங்கள் எங்களுக்கு மேலும் வழங்குவீர்கள். என் அனுபவத்தில், நீங்கள் எந்த பாரபட்சத்தையும் காட்டவில்லை என்று உணர்கிறேன். மத்திய அரசிடம் இருந்து மாநிலம் ஏதாவது கோரினால், அரசு உடனடியாக ஒத்துழைக்கிறது." என்று கூறி இருந்தார்.
பிரதமர் மோடியை விமர்சித்து தீர்மானம் நிறைவேற்றிய காங்கிரஸ்
முதலில் சத்தீஸ்கர் துணை முதல்வரின் இந்த கருத்துக்களை மரியாதை நிமித்தமான ஒன்று என்று காங்கிரஸ் கருதியது. ஆனால், CWC கூட்டத்தின் போது, சத்தீஸ்கர் துணை முதல்வர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். அதன் பிறகு, கார்கே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மன்னிப்பு கேட்டால் செய்த தவறு இல்லை என்று ஆகிவிடாது என்று கூறிய கார்கே, "கவனமாக இருங்கள் பிரதமரை தேவையில்லாமல் புகழ்ந்து பேசாதீர்கள்" என்று காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்டு கொண்டார். மேலும், சனிக்கிழமை நடைபெற்ற இந்த கூட்டத்தின் போது மோடியை விமர்சித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டாட்சி கட்டமைப்பை அரசாங்கம் திட்டமிட்டு கலைக்க முயல்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு பாரபட்சம் காண்பிக்கிறது என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.