இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட மாட்டோம்; மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உறுதி
இருதரப்பு பயணமாக முதல்முறையாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக மாலத்தீவு ஒருபோதும் செயல்படாது என்று உறுதியளித்தார். தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில், இதைக் கூறியதோடு மேலும், இந்தியா தங்களுடைய மதிப்புமிக்க கூட்டாளி மற்றும் நண்பராக செயல்படுவதாகவும் தெரிவித்தார். இந்தியாவுடனான ஒத்துழைப்பு, குறிப்பாக பாதுகாப்பில் முன்னுரிமையாக இருக்கும் என்று எடுத்துரைத்தார். முன்னதாக, இந்தியா அவுட் என்ற தனது தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் சீனா ஆதரவாளராக கருதப்படும் முய்சு, தற்போது இவ்வாறு கூறியுள்ளது சர்வதேச அரசியலில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. அவர் தனது 'மாலத்தீவுகளுக்கு முதலில்' கொள்கையின் கீழ் சர்வதேச உறவுகளை பன்முகப்படுத்தினாலும், அதனால் இந்தியாவின் நலன்களை சமரசம் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்தார்.
பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை
இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாடு குறித்து முய்சு விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு முய்சுவின் இந்திய வெறுப்பு செயல்பாட்டால் ஏற்பட்ட இராஜதந்திர பதட்டங்கள் காரணமாக, அங்கு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்த நிலையில், தங்கள் நாட்டிற்கு தொடர்ந்து வருகை தருமாறு அவர் கேட்டுக் கொண்டார். மேலும், இந்திய ராணுவ வீரர்களை தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றும் முடிவில் உறுதியாக இருந்தாலும், பிரதமர் மோடியைப் பற்றி அவதூறாக பேசிய மூன்று மாலத்தீவு அமைச்சர்களை இடைநீக்கம் செய்தது குறித்தும் முய்சு கூறினார். இந்தியா-மாலத்தீவு இடையேயான உறவு என்பது பல நூற்றாண்டுகளாக பகிரப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் ஆழமான வேரூன்றிய பிணைப்பு என்று அவர் விவரித்தார்.