மார்ச் 15க்குள் இந்திய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தும் மாலத்தீவு: இந்தியா எப்போது பதிலளிக்கும்?
மார்ச் 15ஆம் தேதிக்குள் மாலத்தீவில் இருக்கும் இந்திய படைகளை திரும்பப்பெறுமாறு இந்தியாவிடம் மாலத்தீவு கேட்டு கொண்டுள்ளது. மார்ச் 15 ஆம் தேதிக்குள் பணியாளர்களை திரும்பப் பெற வேண்டும் என்ற முகமது முய்சு அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இந்தியா இன்னும் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை. இந்தியப் பாதுகாப்புப் பணியாளர்களை திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் நேரம் குறித்து அடுத்த மாதம் நடைபெற இருக்கும் உயர்மட்ட மையக் குழுவின் பேச்சுவார்த்தையின் போது மாலத்தீவுடன் இந்தியா பேச திட்டமிட்டுள்ளது. மார்ச் 17ஆம் தேதி அன்று முக்கியமான மஜ்லிஸ் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு 2 நாட்களுக்கு முன்பு இந்தியப் பாதுகாப்புப் பணியாளர்கள் வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு கேட்டு கொண்டுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய விமானங்கள்
ஜனவரி 14 மற்றும் 15ஆம் தேதிகளில் நடைபெற்ற மைய குழுவின் முதல் கூட்டத்தில், மாலத்தீவின் பிரதிநிதி அலி நசீர், இந்தியாவிடம் மார்ச் 15ஆம் தேதிக்குள் பாதுகாப்புப் பணியாளர்களுக்குப் பதிலாக சிவிலியன் பணியாளர்களை நியமிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த கோரிக்கைக்கு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் கூட்டத்தில் இந்தியா பதிலளிக்கும். கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்கான சிவிலியன் பணியாளர்கள் தயாராக இருக்கிறார்களா என்பது பொறுத்து அதற்கு பதிலளிக்கப்படும். மஜ்லிஸ் தேர்தலுக்கு முன்னதாக மாலத்தீவு அதிபர் முய்ஸு தனது இந்திய-விரோத பிரச்சாரத்தைத் தொடர்ந்திருப்பதால், இந்தியாவுக்கு சொந்தமான இரண்டு ALH, ஒரு டோர்னியர் விமானம் மற்றும் ஒரு OPV அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.