பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்கள்: அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன்
செய்தி முன்னோட்டம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் 3 பேர் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து, மாலத்தீவு தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.
பிரதமர் மோடி தனது லட்சத்தீவு பயணத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை சமீபத்தில் வெளியிட்டு, அந்த தீவை இந்தியர்களுக்கான சுற்றுலா தலமாக அறிவித்தார்.
இதையடுத்து, மாலத்தீவுக்கு மாற்றான ஒரு சுற்றுலா தலமாக லட்சத்தீவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார் என்று கருதி பிரதமர் மோடியையும் லட்சத்தீவையும் சில மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சித்து தரக்குறைவாக பேசி இருந்தனர்.
இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாலத்தீவின் 'இளைஞர் அதிகாரமளித்தல்' துணை அமைச்சர் மரியம் ஷியுனா, ஒரு ட்விட்டர் பதிவில், பிரதமர் நரேந்திர மோடியை "கோமாளி" என்றும், "பொம்மலாட்ட பொம்மை" என்றும் அழைத்திருந்தார்.
ட்ஜ்கவ்
மாலத்தீவை புறக்கணிக்க அழைப்பு விடுக்கும் இணையவாசிகள்
அவரை தவிர, எம்.பி. ஜாஹித் ரமீஸ் உள்ளிட்ட மாலத்தீவு அதிகாரிகள், பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை கேலி செய்து பதிவிட்டிருந்தனர்.
"இந்த நடவடிக்கை சிறப்பானது. ஆனால், எங்களுடன் போட்டியிடும் எண்ணம் மாயையானது. நாங்கள் வழங்கும் சேவையை அவர்களால் எப்படி வழங்க முடியும்? அவர்கள் எப்படி சுத்தமாக வைத்திருப்பார்களோ? அறைகளில் இருந்து வரும் நாற்றம் மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும்." என்று ஜாஹித் ரமீஸ் கூறி இருந்தார்.
மாலத்தீவு அரசாங்கம், இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக அந்நாட்டு அமைச்சர்கள் கூறிய இழிவான கருத்துக்களை நிராகரித்ததுடன், அவர் கூறியது மாலத்தீவு அரசாங்கத்தின் கருத்துக்கள் இல்லை என்று மறுத்துள்ளது.
இந்நிலையில், இணையவாசிகள் பலர் மாலத்தீவு அதிகாரிகளின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு "மாலத்தீவை புறக்கணிக்க" அழைப்பு விடுத்து வருகின்றனர்.