மகளிர் உரிமை தொகை திட்டம் - 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ள விண்ணப்பப்பதிவு முகாம்கள்
தமிழ்நாடு மாநிலத்தில் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது அமலுக்கு வரவுள்ளது. அதற்காக தகுதியான பெண்களை தேர்ந்தெடுக்கும் பணியானது தற்போது மும்முரமாக நடத்தப்படவுள்ளது. அதன்படி, இந்த திட்டத்திற்கான விண்ணப்பதிவு முகாம்களை 2 கட்டங்களாக நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்து அதுகுறித்த அறிவிப்பு ஒன்றினையும் அண்மையில் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், "மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடக்கவுள்ள நிலையில், இதற்கான முதல் கட்ட முகாம்கள் வரும் ஜூலை 24ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடக்கும். அதே போல் 2ம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5ம் தேதி துவங்கி ஆகஸ்ட்.,16ம் தேதி நடக்கவுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் முகாம்கள் நடக்கும் 4 நாட்கள் முன்னதாக வழங்கப்படும்
மேலும் இந்த விண்ணப்பத்தினை பதிவு செய்கையில் வருமான சான்றிதழ் போன்ற எவ்வித ஆவணங்களும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, நியாயவிலைக்கடை பணியாளர்கள் முகாம்கள் நடக்கும் 4 நாட்கள் முன்னதாக வீடுவீடாக சென்று விண்ணப்பங்களை வழங்குவர் என்றும், அதில் முகாம்கள் நடக்கும் தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் ரேஷன் கார்டிற்காக ஒதுக்கப்பட்ட நியாயவிலை கடைகளில் மட்டுமே இந்த விண்ணப்பத்தினை பதிவு செய்யவேண்டும். இந்த விண்ணப்ப பதிவானது ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் செயல்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், இதுத்தொடர்பான சந்தேகங்களுக்கு 044-259619208 என்னும் எண்ணினை தொடர்பு கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த விண்ணப்பங்களை பெற மக்கள் நியாயவிலைக்கடைகளுக்கு வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.