மகளிர் உரிமை தொகை திட்டம் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சென்னை மாவட்டத்தில் திராவிட இயக்க எழுத்தாளரான திருநாவுக்கரசு அவர்களின் இல்ல திருமணவிழா அண்மையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் செப்டம்பர் 15ம்தேதி முதல் தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு 'கலைஞர் மகளிர் உரிமை தொகை' திட்டத்தின் படி, மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்தார். தொடர்ந்து, இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடி தமிழக மகளிர் பயனடையவுள்ளனர் என்றும் கூறியிருந்தார். அதன்படி, தற்போது இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவிற்கான முகாம்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்படுவது குறித்த நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டஆட்சியர்கள், மாவட்ட சிஇஓக்கள், ஆணையர்கள் உள்ளிட்டோருக்கு இதுகுறித்த அறிக்கை ஒன்றினை, உரிமைத்தொகை திட்ட அலுவலர் இலம்பகவத் அனுப்பியுள்ளார்.
வரும் 24ம் தேதி முதல் சுமார் 36 ஆயிரம் நியாயவிலை கடைகளில் முகாம்கள் அமைப்பு
அந்த அறிக்கையில், ஒவ்வொரு நியாயவிலை கடைக்கும் அரசு பரிந்துரைத்துள்ளபடி, இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவார்கள். அந்த தன்னார்வாலர்கள், நடத்தப்படவுள்ள முகாம்களில், மகளிர் உரிமை திட்ட விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வரும் 24ம் தேதி முதல் சுமார் 36 ஆயிரம் நியாயவிலை கடைகளில் விண்ணப்பங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கான பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகளும், பள்ளி ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தன்னார்வாலர்கள் எந்தெந்த நியாயவிலை கடைகளில் வசிக்கிறார்கள் என்னும் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.