நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கின் ஆறாவது குற்றவாளி கைது
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கின் ஆறாவது குற்றவாளியான மகேஷ் குமாவத்தை டெல்லி போலீசார் கைது செய்தனர். நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சதித்திட்டத்தில் மகேஷ் குமாவத்துக்கும் பங்கு இருக்கிறது என்பதை தெரிந்துகொண்ட அதிகாரிகள் அவரையும் கைது செய்தனர், பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்தது. அப்போது மக்களவை பூஜ்ஜியம் நேரத்தின் போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர், புகை குண்டுகளை வீசினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சம்பவம் நடக்கும் போது ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் குமாவத்தும் டெல்லி வந்திருக்கிறார்.
குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்த மகேஷ் குமாவத்
நேற்று வரை தலைமறைவாக இருந்த இந்த சம்பவத்தின் முக்கிய சதிகாரரான லலித் ஜா, ராஜஸ்தானில் உள்ள மகேஷின் மறைவிடத்தில் தான் தங்கி இருந்து, ஆதரங்கள் அடங்கிய மொபைல் போன்களை அழித்திருக்கிறார். இந்த விவரங்கள் எல்லாம் காவல்துறை விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, ராஜஸ்தானை சேர்ந்த மகேஷ் குமாவத் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட 5 பேருடனும் மகேஷ் குமாவத் பல நாட்களாக தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. லலித் மற்றும் மகேஷ் இருவரும் வியாழக்கிழமை புது டெல்லி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒன்றாக சரணடைந்தனர். லலித்தின் கைது வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டது. மகேஷின் உறவினர் கைலாஷிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை அவரை போலீசார் கைது செய்யவில்லை.