பார்க்கிங் எங்கு செய்வீர்கள் என காட்டித்தான் இனி புது கார் வாங்க வேண்டும்! மகாராஷ்டிரா அரசு விரைவில் அமல்
செய்தி முன்னோட்டம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடியை சமாளிக்க அம்மாநில அரசு ஒரு முக்கிய கொள்கையை பரிசீலித்து வருகிறது.
அதன்படி தனிநபர்கள் கார் வாங்குவதற்கு முன் பார்க்கிங் இடம் உள்ளதா என்பதை நிரூபிக்க, சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த திட்டத்தை போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர்நாயக் அறிவித்தார்.
முன்மொழியப்பட்ட விதியின் பின்னணியில் உள்ள காரணத்தை விளக்கிய சர்நாயக், அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையால், குறிப்பாக மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை எடுத்துரைத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறினார்.
பார்க்கிங் வசதி
அதிகரித்த போக்குவரத்து, பார்க்கிங் தட்டுப்பாடு போன்றவற்றால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
வாகனங்களை கட்டுப்பாடில்லாமல் சாலைகளில் நிறுத்தப்படுவதால், ஆம்புலன்ஸ், தீயணைப்புப் படை போன்ற அவசர சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவது உள்ளிட்ட கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு சரியான பார்க்கிங் வசதி இல்லாததால், அவர்கள் பெரும்பாலும் பொதுவழிகளிலும், சாலைகளிலும் வாகனங்களை நிறுத்துகின்றனர் என அவர் கூறினார்.
பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு இந்தக் கொள்கை பாரபட்சம் காட்டாது என்று சர்நாயக் உறுதியளித்தாலும், தனிப்பட்ட பார்க்கிங் வசதி இல்லாத வாகனம் வாங்குவோர், பொது வாகன நிறுத்துமிடங்களில் இடங்களைப் பெற்றால், கார்களை வாங்கலாம் என்று அவர் தெளிவுபடுத்தினார்.