மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை பிரியாணி வழங்க திட்டம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களின் மதிய உணவில் ஒரு நாள் முட்டை பிரியாணி வழங்க அம்மாநில அரசு முடிவு செத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் தற்போது சத்துணவு திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு, மதிய உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் மும்பை போன்ற பெருநகரங்களில் உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் காணப்படுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாணவர்களின் ஊட்டச்சத்தினை அதிகரிக்க உணவு வகைகளில் முட்டை, வாழைப்பழம் உள்ளிட்டவைகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
சோயா பால் தயார் செய்யும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தீபக் கேசர்கர் கூறுகையில், 'வாரத்தில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை அவித்த முட்டை அல்லது முட்டை பிரியாணியினை மாணவர்களுக்கு வழங்க பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார். மேலும், சைவ உணவு உண்ணும் மாணவர்களுக்கு வாழைப்பழம், மதிய உணவில் தினமும் இனிப்பு சேர்த்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். அதனையடுத்து, மாணவர்களுக்கு புரத சத்தினை அளிக்கும் சோயா பால் வழங்குவது குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. இதன் காரணமாக சோயா பால் தயார் செய்யும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் கல்வித்துறை அமைச்சர் தகவல் அளித்துள்ளார்.