மகளிர் உரிமைத் தொகை புதிய பயனாளிகள் பட்டியல் நவம்பர் 30க்குள் இறுதி; உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்குப் புதிதாக விண்ணப்பித்திருக்கும் பெண்களுக்கு முக்கிய அறிவிப்பைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். புதிதாக விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வப் பட்டியல் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் இறுதி செய்யப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார். ராணிப்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அவர், நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், விடுபட்ட தகுதியுள்ள பெண்களுக்குக் கண்டிப்பாக உரிமைத் தொகை வழங்கப்படும் என்று உறுதியளித்தார். சமீபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் சுமார் 28 லட்சம் பெண்கள் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். தற்போதுவரை 1.20 கோடிக்கும் அதிகமான மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
உதவித் தொகை
டிசம்பர் 15 ஆம் தேதி முதல் உதவித் தொகை
சட்டப்பேரவையில் அளித்த அறிவிப்பின்படி, இந்த புதிய விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் கள ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வுக்குப் பிறகு, தகுதியுள்ள புதிய பயனாளிகளுக்கு டிசம்பர் 15 ஆம் தேதி முதல் உதவித்தொகை வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், மகளிர் முன்னேற்றத்திற்காகத் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் முக்கியத் திட்டங்களையும் அவர் எடுத்துரைத்தார். குறிப்பாக, மகளிருக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம் (விடியல் பயணத் திட்டம்) மூலம் பெண்கள் மாதந்தோறும் ரூ.900 முதல் ரூ.1000 வரை சேமிப்பதாகவும், இதுவரை 820 கோடிக்கும் அதிகமான பயணங்களை அவர்கள் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.