மதுரை ரயில் தீ விபத்து - கேஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை
மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில் கடந்த ஆகஸ்ட்.26.,மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்திரபிரதேசம் லக்னோவிலிருந்து ராமேஸ்வரம் செல்ல சுற்றுலா பயணிகள் வந்த ரயில் கடந்த 25ம்தேதி இரவு மதுரை ரயில்நிலையத்திலிருந்து ஒரு கி.மீ.,தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த ரயிலில் 26ம்தேதி அதிகாலை திடீரென கேஸ் வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அதன்படி, சுற்றுலாப்பயணம் மேற்கொண்ட 63பேர் கொண்ட குழு லக்னோ ரயில்நிலையத்தில் இருந்து ஒரு பெட்டியினை வாடகைக்கு பிடித்து தங்களுடன் 5 சமையல்காரர்களையும் அழைத்து வந்துள்ளனர். இந்த சமையல்காரர்கள் அதிகாலையில் டீ போட்டப்பொழுதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே ரயில்வே பாதுகாப்புத்துறை ஆணையர் சவுத்ரி நேற்று(ஆகஸ்ட்.,27)இதுகுறித்த விசாரணையினை நடத்தினார்.
எந்த ரயில் நிலையத்தில் வைத்து இந்த சிலிண்டர் ஏற்றப்பட்டது? என விசாரணை
2வது நாளான இன்றும்(ஆகஸ்ட்.,28)அவர் தனது விசாரணையினை தொடர்ந்து நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. சுற்றுலாவுக்கு செல்ல ஏற்பாடு செய்த நிறுவனமே கியாஸ் சிலிண்டரை ரயிலில் ஏற்றியுள்ளனர் என்று கூறப்படும் நிலையில், அவர்களுக்கு கியாஸ் சிலிண்டர் கொடுத்தது யார்? எந்த ரயில் நிலையத்தில் வைத்து இந்த சிலிண்டர் ஏற்றப்பட்டது? என்பதன் அடிப்படையில் தற்போது விசாரணை நடக்கிறது. அதேபோல் இந்த விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 8 பேரிடமும் விசாரிக்கப்பட்ட நிலையில், தப்பியோடிய சுற்றுலா நிறுவனத்தை சேர்ந்த 5 பேரையும் காவல்துறை தற்போது பிடித்து விசாரணை செய்து வருகிறது. மேலும், அவர்களுள் சமையல்காரர்களான 2 பேரை காவல்துறை விசாரணைக்கு அழைத்துவந்துள்ள நிலையில், இன்று மாலைக்குள் விசாரணை முடிந்து அதுகுறித்த தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.