Loading...
மதுரையில் பிரபல Tanishq நகை கடையில் 500 சவரன் தங்க நகைகள் கொள்ளை; பூட்டை உடைக்காமல் உள்ளே புகுந்த மர்ம நபர்
மதுரையில் பிரபல நகை கடையில் 500 சவரன் தங்க நகைகள் கொள்ளை

மதுரையில் பிரபல Tanishq நகை கடையில் 500 சவரன் தங்க நகைகள் கொள்ளை; பூட்டை உடைக்காமல் உள்ளே புகுந்த மர்ம நபர்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 12, 2026
04:32 pm

செய்தி முன்னோட்டம்

மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட பிரபல தனியார் நகைக் கடையில் (Tanishq), முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து சுமார் 500 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருடுபோன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.35 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. மிகவும் பரபரப்பான பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த நகைக் கடை திறக்கப்பட்டு வெறும் 10 முதல் 15 நாட்களே ஆகியுள்ள நிலையில், கடையின் பூட்டை உடைக்காமலும் சுவரில் துளையிடாமலும் இந்த துணிகர கொள்ளை அரங்கேறியிருப்பது காவல்துறையினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பின்னணி

சம்பவம் நடந்தது எப்படி?

இன்று காலை வழக்கம் போல கடைக்கு வந்த ஊழியர்கள் கதவுகளை திறந்து பார்த்தபோது, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நகைக் கடை தொடங்கப்பட்டு சில நாட்களே ஆன நிலையில், இன்னும் பிரம்மாண்ட திறப்பு விழா நடத்தப்படவில்லை என்றும், கடையின் உள்புற பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று இரவு முகமூடி அணிந்து வந்த தனி நபர், கடையின் மாடி வழியாக அல்லது பின்பக்க வழியாக உள்ளே புகுந்து நகைகளை திருடிச் சென்றிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லிஃப்ட் வழி அல்லது மின் விசிறிக்கான துளை வழியாக திருடன் உள்ளே நுழைந்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணை

காவல்துறையின் தீவிர விசாரணை & ஆணையர் விளக்கம்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த எஸ்.எஸ். காலனி காவல்துறையினர், ஊழியர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் கடையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

சம்பவ இடத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன், *"கடையில் இருந்த மொத்தத் தங்கத்தின் அளவில் சுமார் 30 சதவீதம் திருடு போயுள்ளது" எனத் தெரிவித்தார்.

கடையின் உள் கட்டமைப்பு தெரிந்த நபர்கள் யாரேனும் இந்த கொள்ளையில் ஈடுபட்டார்களா என்ற கோணத்திலும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT