மதுரை சித்திரை திருவிழா - மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண பிரம்மோற்சவம்
மதுரை சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு ஆண்டும் 12 நாட்கள் நடக்கும் இந்த சித்திரை திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படும். இதன் முக்கியநிகழ்வுகளுள் ஒன்றான பட்டாபிஷேகம் நேற்றுமுன்தினம் மீனாட்சி அம்மனுக்கு நடந்தது. இதனைதொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக தேவர்களோடு போரிட்டு வென்று, இறுதியில் சுந்தரேஸ்வரரிடம் போர் செய்யும் திக்குவிஜயம் என்னும் நிகழ்வும் நேற்று(மே.,1) சிறப்பாக அரங்கேறியது. இதனையடுத்து சித்திரை திருவிழாவின் உச்சமாக கருதப்படும் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று(மே.,2) காலை கோயிலில் உள்ள வடக்கு-மேற்கு ஆடிவீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.35 மணிக்குமேல் 8.59மணிக்குள் மிதுனலக்னத்தில் நடந்தது. இந்த திருக்கல்யாணம் முடிந்தநிலையில் அங்கு கூடியிருந்த பெண்கள் புது தாலி கயிறினை அணிந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடவேண்டியவை.
மீனாட்சி-சுந்தரேஸ்வரர் 4 மாசி வீதிகளில் உலா வருவார்கள்
திருமணம் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருமண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்கள். தொடர்ந்து இன்று இரவு 7.30 மணியளவில் சுந்தரேஸ்வரர் யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூ பல்லக்கிலும் எழுந்தருளி 4 மாசி வீதிகளில் வலம் வருவார்கள். மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தினை முன்னிட்டு முன்னதாக திருப்பரங்குன்றத்தில் இருந்து பவளக்கனிவாய் பெருமாள், தெய்வானையுடன் முருகப்பெருமான் ஆகியோர் பல்லக்கில் புறப்பட்டு வந்தனர். மேலும் பக்தர்கள் இந்த திருக்கல்யாணத்தினை காண ஏதுவாக பெரிய அளவிலான எல்.இ.டி.திரைகள் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்தது. இந்த முக்கிய நிகழ்வினை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் இங்கு ஒன்று கூடுவதையடுத்து 5000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.