Page Loader
மதுரை எய்ம்ஸ்: டெண்டர் விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு 
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை - டெண்டர் விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு

மதுரை எய்ம்ஸ்: டெண்டர் விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு 

எழுதியவர் Nivetha P
Sep 28, 2023
01:05 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதற்காக மதுரை தோப்பூரில் இடமும் தேர்வு செய்யப்பட்டது. அதன்படி மதுரைக்கு புறநகரில், தோப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில், 224.24 ஏக்கர் பரப்பளவில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக ரூ.1,977.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார். ஆனால் அடிக்கல் நாட்டப்பட்டு 4 ஆண்டுகளாகியும் கட்டுமான பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது, மக்கள் மத்தியில் பல வித கேள்விகளை எழுப்பியது.

எய்ம்ஸ் 

அக்டோபர் மாதம் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

ரூ.1,977.80 நிதியில், ரூ.1,627.80 கோடியினை ஜப்பான் நாட்டினை சேர்ந்த ஜைக்கா நிறுவனத்திடம் கடனாக பெறுவதாக மத்திய நிதி அமைச்சர் தெரிவித்தார். அதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம், எய்ம்ஸ் மருத்துவமனையினை கட்டுவதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்த விண்ணப்பத்தினை(டெண்டர்) செப்.,18ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதில் முக்கிய கோட்பாடாக, கட்டுமான பணிகள் 33 மாதங்களில் நிறைவுபெற வேண்டும் என்றும் கூறப்பட்டது. தொடர்ந்து, கடந்த 4ம்தேதி டெண்டருக்கு விண்ணப்பித்த நிறுவனங்களுடன், எய்ம்ஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டதன் பேரில், முன்தகுதி விண்ணப்பக்கால அவகாசம், வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதிவரை நீட்டிக்கப்படுதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.