
தமிழகத்தில் அரசியல் கூட்டங்களுக்கு புதிய விதிகள்: தவெக வழக்கில் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, அனைத்து கட்சிகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளை வகுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் வகையில், குறிப்பிட்ட தொகையை பாதுகாப்பு வைப்புத் தொகையாக (டெபாசிட்) பெறும் வகையிலும் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என நீதிபதி என்.சதீஷ்குமார் அறிவுறுத்தினார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதன் துணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வழக்கு
கட்சித் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் மேற்கொள்ளவுள்ள பிரச்சாரத்திற்கு காவல்துறை பாரபட்சமின்றி அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. விசாரணையின்போது, தவெக தரப்பு வழக்கறிஞர், தங்கள் கட்சிக்கு மட்டும் பூர்த்தி செய்ய முடியாத நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக வாதிட்டார். இதற்குப் பதிலளித்த காவல்துறை வழக்கறிஞர், எந்தவொரு கட்சிக்கும் அனுமதி மறுக்கப்படவில்லை என்றும், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காரணங்களுக்காகவே நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என வலியுறுத்தினார். மேலும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் யார் பொறுப்பேற்பது என கேள்வி எழுப்பிய நீதிபதி, விதிமுறைகள் வகுப்பது குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.