நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் படங்கள் நீக்கப்படாது: சென்னை உயர்நீதிமன்றம்
சென்ற வார இறுதியில், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப்பதிவாளர் அனுப்பிய அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மற்றும் நீதிமன்ற வளாகங்களிலும் உள்ள திருவள்ளுவர் மற்றும் காந்தியடிகள் திருவுருவ படங்களை தவிர, மற்ற தலைவர்கள் படங்களை நீக்க உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து, நீதிமன்ற வளாகங்களில் உள்ள அம்பேத்கரின் சிலைகளையும், உருவப்படங்களையும் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பல அரசியல் தலைவர்களும், வழக்கறிஞர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றது. இதனையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கங்காபூர்வாலாவை சந்தித்து பேசினார்.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி
அந்த சந்திப்பின் போது, அமைச்சர் ரகுபதி, தமிழக அரசின் நிலைப்பாட்டை எடுத்துக்கூறியுள்ளார். அதாவது, அம்பேத்கர் படத்தை கோர்ட்டு, கோர்ட்டு வளாகத்தில் அகற்றக்கூடாது என கோரிக்கை விடப்பட்டது. அதை தலைமை நீதிபதி ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை கேட்டறிந்த தலைமை நீதிபதி, கோர்ட்டுகளில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை. தற்போது உள்ள நடைமுறையே தொடரும் என தெரிவித்தார். இந்த தகவல் வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது" எனக்கூறப்பட்டுள்ளது.