LOADING...
ஜாதி, மதம் அற்றவர் சான்றிதழ் வழங்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்
ஜாதி, மதம் அற்றவர் சான்றிதழ் வழங்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும்!

ஜாதி, மதம் அற்றவர் சான்றிதழ் வழங்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 12, 2025
07:59 am

செய்தி முன்னோட்டம்

திருப்பத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், தன்னை எந்த ஜாதியிலும் மதத்திலும் சேர்க்க வேண்டாம் எனத் தெரிவித்து கடந்த 2023 ஆம் ஆண்டு மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தாருக்கு, "ஜாதி, மதம் இல்லை" எனச் சான்றிதழ் வழங்க கோரியிருந்தார். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, சந்தோஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, "ஜாதி, மதம் இல்லை" என சான்றிதழ் வழங்க தாசில்தாருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறிய அரசுத் தரப்பின் வாதத்தை ஏற்றுக்கொண்டு, மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த சந்தோஷ், "தனது பிள்ளைகளை ஜாதி, மதம் அற்ற சமூகத்தில் வளர்க்க விரும்புவதாகவும், எந்தவித அரசுச் சலுகைகளும் பெற விரும்பவில்லை" எனக் கூறினார்.

வழக்கு

வழக்கு விசாரணையின் இறுதியில் உயர் நீதிமன்றம் பரிந்துரை

இந்த மேல்முறையீடு நீதிபதிகள் எம். எஸ். ரமேஷ் மற்றும் என். செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் தீர்ப்பில், திருப்பத்தூர், கோவை, சென்னை (அம்பத்தூர்) தாசில்தார்கள் சிலர், "ஜாதி, மதம் இல்லை" என சான்றிதழ்கள் ஏற்கனவே வழங்கியிருந்த வரலாறு குறித்து நீதிமன்றம் குறிப்பிட்டது. இதனையடுத்து, "இவ்வகை சான்றிதழ் வழங்கும் மனுதாரரின் நோக்கம் பாராட்டத்தக்கது. இந்திய அரசியலமைப்பின்படி, ஜாதி மற்றும் மத அடிப்படையிலான பாகுபாடுகள் தடைசெய்யப்பட்டாலும், சமூகம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் அவை இன்னும் தாக்கம் செலுத்துகின்றன". "எனவே, இதுபோன்ற சான்றிதழ் வழங்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களுடன் அரசு அரசாணை பிறப்பிக்க பரிசீலிக்க வேண்டும்" என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.