LOADING...
செந்தில் பாலாஜிக்கு அடுத்த நெருக்கடி: ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்

செந்தில் பாலாஜிக்கு அடுத்த நெருக்கடி: ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்!

எழுதியவர் Vasuki
Apr 29, 2026
06:08 pm

செய்தி முன்னோட்டம்

முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலத்தில், சுமார் 45,000 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் புகாரைச் சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை இரண்டு வாரங்களில் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். "வழக்கை ஒரு சுதந்திரமான விசாரணை அமைப்பிற்கு மாற்ற வேண்டுமா என்பதை முடிவு செய்யவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகளின் தகுதி குறித்த முடிவு அல்ல. இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் யாருக்கும் எதிரானவையாகக் கருதப்படக் கூடாது" என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

அறப்போர் இயக்கம்

அதிமுக தொடர்ந்த வழக்கு

கடந்த 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், மின் வாரியத்திற்காகப் புதிய மின்மாற்றிகளைக் கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக 'அறப்போர் இயக்கம்' சார்பில் சிறப்புப் புலனாய்வு குழு விசாரணை கோரி வழக்குத் தொடரப்பட்டது. இதேபோல், அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் சிபிஐ விசாரணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர். சந்தை விலையை விடக் கூடுதல் விலைக்கு மின்மாற்றிகள் வாங்கப்பட்டதன் மூலம் அரசுக்குக் கோடி கணக்கில் நஷ்டம் ஏற்படுத்தப்பட்டதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவு

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. தற்போது இந்த விவகாரத்தைக் கையாண்டு வரும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC), அனைத்து ஆவணங்களையும் இரண்டு வாரங்களுக்குள் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். சிபிஐ இந்த விவகாரத்தில் புதிதாக விசாரணையைத் தொடங்கி, சட்டப்படி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு, டான்ஜெட்கோ (TANGEDCO) மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியவை சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ற்கனவே அமலாக்கத் துறை வழக்கில் சிக்கியுள்ள செந்தில் பாலாஜிக்கு, தற்போது சிபிஐ விசாரணையும் சேர்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement