ஆகஸ்ட் 1 முதல் மாறும் இந்திய அஞ்சல் துறை புதிய விதிகள் மற்றும் கட்டணங்கள்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
செய்தி முன்னோட்டம்
இந்திய அஞ்சல் துறை (India Post) தனது வாடிக்கையாளர்கள் கடிதங்கள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் பார்சல்களை அனுப்புவதற்கான விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 1 முதல், எது 'ஆவணம்' மற்றும் எது 'பார்சல்' என்பதற்கான தெளிவான வரையறைகளை அஞ்சல் துறை அமல்படுத்துகிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தேவையற்ற கூடுதல் கட்டணம் செலுத்துவது தவிர்க்கப்படும். எனினும், சில்லறை வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான ஸ்பீட் போஸ்ட் கட்டணத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.
விளக்கம்
'ஆவணம்' என்றால் என்ன?
புதிய விதிகளின்படி, எவ்வித மறுவிற்பனை மதிப்பும் அல்லது வணிக மதிப்பும் இல்லாத பொருட்கள் அனைத்தும் 'ஆவணங்கள்' என்ற பிரிவில் வகைப்படுத்தப்படும்:
கடிதங்கள், அச்சிடப்பட்ட பொருட்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்கள்.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அனுப்பும் வெல்கம் கிட்கள், பாஸ்புக்குகள், செக்புக்குகள், வங்கி அறிக்கை நகல்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள்.
அரசு வழங்கிய அடையாள ஆவணங்களான ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட், வோட்டர் ஐடி மற்றும் டிரைவிங் லைசென்ஸ்.
500 கிராம் வரை எடையுள்ள வர்த்தக நோக்கமற்ற வாழ்த்து அட்டைகள், ரக்ஷா பந்தன் கவர்கள் மற்றும் தனிப்பட்ட கடிதங்கள்.
அதேவேளையில், விற்பனைக்காக அனுப்பப்படும் பொருட்கள் அல்லது வணிக மதிப்புடைய பொருட்கள் அனைத்தும் இனி 'பார்சல்' பிரிவின் கீழ் மட்டுமே கையாளப்படும்.
காரணம்
விதிகளை மாற்ற காரணம் என்ன?
இதுவரை ஆவணங்களுக்கும் பார்சல்களுக்கும் இடையே தெளிவான வரையறை இல்லாததால், தபால் நிலையங்களில் கவுன்ட்டர்களில் குழப்பம் நிலவி வந்தது.
பல நேரங்களில் ஆவணங்களை அனுப்புவதற்கும் வாடிக்கையாளர்கள் பார்சல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது.
தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த முறையான வகைப்பாடு மூலம், கட்டண முறை வெளிப்படையாக்கப்பட்டு, வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள், அரசுத் துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட தினசரி பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை அனுப்பும் அமைப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் பலன் கிடைக்கும்.
கட்டண விவரங்கள்
ஸ்பீட் போஸ்ட் கட்டண விவரங்கள்
24 மணி நேர ஸ்பீட் போஸ்ட்: 50 கிராம் வரையிலான ஆவணங்களுக்கு உள்ளூர் சேவைக்கு ரூ. 38 எனவும், நாட்டின் பிற பகுதிகளுக்கு ரூ. 94 (+ ஜி.எஸ்.டி) எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
48 மணி நேர ஸ்பீட் போஸ்ட்: சில்லறை வாடிக்கையாளர்களுக்கு எடை மற்றும் தொலைவைப் பொறுத்து ரூ. 61 முதல் ரூ. 121 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
மொத்தமாக அனுப்புபவர்கள்: ஒப்பந்த அடிப்படையில் அதிக அளவில் ஆவணங்களை அனுப்பும் நிறுவனங்களுக்கு 24 மணி நேர சேவைக்கு ரூ. 38 முதல் ரூ. 100 வரையிலும், 48 மணி நேர சேவைக்கு ரூ. 48 முதல் ரூ. 72 வரையிலும் தனிச் சலுகைக் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.