கரூரில் செந்தில் பாலாஜி வீடு மற்றும் ஆதரவாளர்கள் இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
செய்தி முன்னோட்டம்
திமுக முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகள் உட்பட கரூரில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். செந்தில் பாலாஜி மீது அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கு, டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் ரூ.397 கோடி முறைகேடு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே, தவெக சட்டமன்ற உறுப்பினருக்கு பணம் கொடுத்துப் பேரம் பேச முயன்ற வழக்கு தொடர்பாகவும், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக் குமாரும் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர்.
விவரங்கள்
சோதனை நடைபெறும் இடங்கள்
திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை 7 மணி முதல் இந்தச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனை நடைபெறும் இடங்கள்:
கரூர் ராமேஸ்வரப்பட்டியில் அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு.
மூர்த்திப்பாளையத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணியன் வீடு.
கோயம்பள்ளியில் உள்ள திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் பாஸ்கரன் வீடு.
கோதை நகரில் உள்ள ஆதரவாளர்களான அதிபன் ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோரின் வீடுகள்.
கரூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் மற்றும் கிடங்கு.
விசாரணை
பெற்றோரிடம் விசாரணை
ராமேஸ்வரப்பட்டியில் உள்ள வீட்டில் சோதனையின் போது இருந்த செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த திடீர் சோதனையின் முழுமையான பின்னணி மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் சோதனை முடிவிலேயே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.