Loading...
ஒரு ஏஐ படத்திற்கு 2 ஸ்பூன் தண்ணீர்! ஏஐ ட்ரெண்ட்களால் வரும் பேரழிவு; ஐநா அதிர்ச்சித் தகவல்
ஏஐ ட்ரெண்ட்களால் வரும் தண்ணீர் பேரழிவு குறித்து ஐநா அதிர்ச்சித் தகவல்

ஒரு ஏஐ படத்திற்கு 2 ஸ்பூன் தண்ணீர்! ஏஐ ட்ரெண்ட்களால் வரும் பேரழிவு; ஐநா அதிர்ச்சித் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 12, 2026
09:15 am

செய்தி முன்னோட்டம்

சமூக வலைதளங்களில் 1980களின் தோற்றம் அல்லது கிப்லி பாணி கதாபாத்திரங்களாக நம்மை மாற்றிப் பார்க்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ட்ரெண்டுகள் வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால், இந்த சில நிமிட மகிழ்ச்சிக்கு பின்னால் நமது இயற்கை வளங்கள் கடுமையாக சூறையாடப்பட்டு வருகின்றன. செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் மற்றும் அவற்றின் தரவு மையங்கள் இயங்குவதற்கு அத்தியாவசியத் தேவையான தண்ணீரும் மின்சாரமும் பிரம்மாண்ட அளவில் நுகரப்பட்டு வருகின்றன. கோடிக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் இந்த சுவாரஸ்ய ட்ரெண்டுகளைப் பின்பற்றுவதுதான் மிகப்பெரிய ஆபத்தாக மாறியுள்ளது.

தண்ணீர் பயன்பாடு

ஒரு ஏஐ படமும் 3 பில்லியன் லிட்டர் தண்ணீரும்

ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தின் (UNU-INWEH) 2026 ஆம் ஆண்டின் ஆய்வறிக்கையின்படி, ஒரு சாதாரண ஏஐ படத்தை உருவாக்க 2.9 வாட்-அவர் மின்சாரமும் 29 மில்லி லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது.

உலகளவில் தினமும் உருவாக்கப்படும் 300 மில்லியன் ஏஐ படங்களால் ஆண்டுதோறும் 3 பில்லியன் லிட்டருக்கும் அதிகமான தண்ணீர் வீணாகிறது.

மனிதன் செய்யும் ஓவியப் பணிகளை ஏஐ இயந்திரங்கள் மூலம் மாற்றுவதும், அதற்கு இவ்வளவு இயற்கை வளங்களை செலவிடுவதும் சுற்றுச்சூழலுக்கு மாபெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

தண்ணீர் பஞ்சம்

பெங்களூரின் டேட்டா சென்டர்களும் கடுமையான தண்ணீர் பஞ்சமும்

கர்நாடகாவின் 32 தரவு மையங்களில் 31 மையங்கள் பெங்களூரிலேயே அமைந்துள்ளன.

ஒரு மெகாவாட் தரவு மையம் இயங்கத் தினமும் 68,500 லிட்டர் தண்ணீர் தேவைப்படும் சூழலில், பெங்களூர் தரவு மையங்கள் தினமும் 20 மில்லியன் லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன.

75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் கடுமையான வெப்ப அலையையும், நீர் தட்டுப்பாட்டையும் எதிர்கொண்டு வரும் பெங்களூர் நகருக்கு, இந்தத் தரவு மையங்களின் கூடுதல் நீர் தேவைகள் பெரும் பேரழிவை ஏற்படுத்தி வருகின்றன.

ADVERTISEMENT

சுற்றுச்சூழல்

எதிர்காலச் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் விழிப்புணர்வும்

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உலக வெப்பமயமாதலை அதிகரித்து அடுத்தடுத்த தலைமுறைகளைப் பாதிக்கும் என எச்சரிக்கப்பட்ட காலங்கள் மாறி, அது இப்போது நம் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் தரவு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளின் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிப் போய் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சில வினாடி சமூக வலைத்தள வேடிக்கைக்காக நமது ஒரே வாழ்விடமான பூமியின் குடிநீர் வளத்தைப் பலிகொடுப்பது புத்திசாலித்தனம் அல்ல என்பதை உணர்ந்து, ஏஐ ட்ரெண்டுகளைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ADVERTISEMENT