ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களுக்கு குட் நியூஸ்; போலி தள்ளுபடி, ஏமாற்று விளம்பரங்களுக்கு ஜனவரி 1 முதல் தடை
செய்தி முன்னோட்டம்
அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் ஆன்லைன் வர்த்தகத் தளங்களில் போலி தள்ளுபடிகள் மற்றும் தவறான விளம்பரங்கள் மூலம் நுகர்வோர் ஏமாற்றப்படுவதை தடுக்க மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இனி ஒரு பொருளுக்கு தள்ளுபடி அறிவிக்கும் போது, அதற்கு முந்தைய 30 நாட்களில் அந்தப் பொருள் விற்கப்பட்ட மிகக் குறைந்த விலையே முந்தைய விலையாக கணக்கிடப்பட வேண்டும். தள்ளுபடி தருவது போல் காட்டி, விலையை செயற்கையாக உயர்த்தி ஏமாற்றும் முறை இதன் மூலம் முற்றுப்பெறும். ஜனவரி 1 முதல் இந்த விதிகள் நடைமுறைக்கு வரும்.
விதிகள்
புதிய நுகர்வோர் பாதுகாப்பு திருத்த விதிகள்
பயனர்களை தவறாக வழிநடத்தும் வகையில் தேடல் முடிவுகளை மாற்றி அமைப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தி விளம்பரப்படுத்தப்படும் பொருட்கள், சாதாரண தேடல் முடிவுகளிலிருந்து தெளிவாக வேறுபடுத்திக் காட்டப்பட வேண்டும்.
நுகர்வோருக்குத் தெரியாமலேயே கார்ட்டில் கூடுதல் பொருட்களைச் சேர்க்க வைக்கும் மறைமுக ஏமாற்று வடிவமைப்பு நடைமுறைகளுக்குக் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த புதிய திருத்த விதிகள் ஆன்லைன் வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.