பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சி! 700 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்; 108 டாலரைக் கடந்த கச்சா எண்ணெய் விலை
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கில் தொடரும் அமெரிக்க-ஈரான் போர்ப் பதற்றம் மற்றும் செங்கடல் பகுதியில் ஹவுத்தி அமைப்பினரின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக வெள்ளிக்கிழமை வர்த்தகத் தொடக்கத்தில் இந்திய பங்குச் சந்தைக் குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி ஆகிய இரண்டும் பெரும் சரிவை சந்தித்தன. வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து 74,199 புள்ளிகளிலும், நிஃப்டி 222.55 புள்ளிகள் (0.95%) சரிந்து 23,255.75 புள்ளிகளிலும் வர்த்தகமாயின.
கச்சா எண்ணெய்
பேரலுக்கு $108ஐத் தொட்ட கச்சா எண்ணெய் விலை
ஏமன் நாட்டின் துறைமுக நகரமான மோகாவைக் கைப்பற்றிய ஹவுத்தி அமைப்பினர், செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 108 டாலர் வரை உயர்ந்துள்ளது.
"இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பாலானவை இறக்குமதி செய்யப்படுவதால், எண்ணெய் விலை உயர்வது நாட்டின் ஜிடிபி வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் காலாண்டு லாபத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு உத்தியாளர் வி.கே.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா
அமெரிக்க பாண்ட் ஈல்டு மற்றும் தொடர்ந்து 5வது வார சரிவு
கச்சா எண்ணெய் விலையேற்றத்துடன் சேர்த்து அமெரிக்காவின் 10 ஆண்டுகால பாண்ட் ஈல்டு 4.96 சதவீதமாக உயர்ந்து 5 சதவீதத்தை நெருங்கி வருவதும் சர்வதேச சந்தைகளில் இருந்து முதலீடுகள் வெளியேற முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
நடப்பு வாரத்தில் மட்டும் நிஃப்டி 1.8 சதவீதமும், சென்செக்ஸ் 2.1 சதவீதமும் சரிவைக் கண்டு, தொடர்ந்து 5வது வாரமாக சரிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன.
முக்கிய பங்குகள்
சரிவிலும் தாக்குப்பிடித்த சில முக்கியப் பங்குகள்
சந்தையில் பரவலான விற்பனை அழுத்தம் நிலவிய போதிலும், சில முன்னணித் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுகர்பொருள் பங்குகள் உயர்வைக் கண்டன:
டெக் மஹிந்திரா: 1.54% உயர்வு
ஹெச்சிஎல் டெக்: 0.98% உயர்வு
இன்ஃபோசிஸ்: 0.85% உயர்வு
ஐடிசி: 0.60% உயர்வு
பாரதி ஏர்டெல்: 0.52% உயர்வு
இருப்பினும், ஒட்டுமொத்த வர்த்தக சூழலும் எதிர்மறையாக இருப்பதால் முதலீட்டாளர்கள் அவசரப்பட்டுப் புதிய முதலீடுகளை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என பங்குச் சந்தை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.