Loading...
ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்: ஈரான் மற்றும் ஓமன் இடையே முரண்பாடு; என்ன நடக்கிறது?
வளைகுடா நாடுகளின் ஆதரவுடன் ஒரு கூட்டு பிராந்திய நிர்வாக அமைப்பை உருவாக்க ஓமன் முன்மொழிந்துள்ளது

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்: ஈரான் மற்றும் ஓமன் இடையே முரண்பாடு; என்ன நடக்கிறது?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 29, 2026
09:54 am

செய்தி முன்னோட்டம்

உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிபொருள் போக்குவரத்தில் மிக முக்கியமான கடல் வழியான ஹார்முஸ் ஜலசந்தியை எதிர்காலத்தில் எவ்வாறு நிர்வகிப்பது என்பது தொடர்பாக ஈரான் மற்றும் ஓமன் நாடுகள் தங்களுக்குள் புதிய முன்மொழிவுகளைப் பரிமாறிக் கொண்டுள்ளன. மலாக்கா ஜலசந்தி மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, வளைகுடா நாடுகளின் ஆதரவுடன் ஒரு கூட்டு பிராந்திய நிர்வாக அமைப்பை உருவாக்க ஓமன் முன்மொழிந்துள்ளது. இதன்கீழ் கப்பல்களிடம் கட்டாயக் கட்டணம் வசூலிப்பதற்குப் பதிலாக, நாவிகேஷன் மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்காக விருப்பக் கட்டணத்தைப் பெறப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த முக்கிய நீர் வழியின் மீதான தனி நபர் அல்லது ஒரு நாட்டின் ஆதிக்கத்தைத் தவிர்க்க முடியும் என ஓமன் கருதுகிறது.

ஈரான்

ஓமனின் திட்டத்தை நிராகரித்த ஈரான்

இருப்பினும், இந்தச் சமமான வழித்தடப் பகிர்வுத் திட்டத்தை ஈரான் நிராகரித்துள்ளது.

இது தங்களது பாதுகாப்பு கவலைகளுக்குத் தீர்வளிக்கவில்லை என்று தெரிவித்துள்ள ஈரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசிம் கரீபாபாடி, ஜலசந்தியின் ஒரு குறிப்பிட்ட கடல் வழியை முழுமையாகவும், மற்றொரு வழியின் ஒரு பகுதியையும் ஈரான் மட்டுமே நிர்வகிக்கும் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

அமெரிக்க தரப்போ ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்களிடம் எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படக் கூடாது என்றும், இது ஈரானின் கட்டுப்பாடற்ற சர்வதேச நீர் வழியாகவே தொடர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் மீண்டும் ராணுவத் தாக்குதல்கள் தொடங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ADVERTISEMENT