Page Loader
மத்திய பிரதேசம்: ஆசிரமத்தில் இருந்த 5 குழந்தைகள் மர்ம நோயால் உயிரிழப்பு 

மத்திய பிரதேசம்: ஆசிரமத்தில் இருந்த 5 குழந்தைகள் மர்ம நோயால் உயிரிழப்பு 

எழுதியவர் Sindhuja SM
Jul 03, 2024
01:16 pm

செய்தி முன்னோட்டம்

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஸ்ரீ யுக்புருஷ் தாம் ஆசிரமத்தில் 72 மணி நேரத்திற்குள் அடையாளம் தெரியாத நோயினால் மனநலம் குன்றிய ஐந்து குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். முதலில் அந்த ஆசிரமத்தில் பாதிக்கப்பட்ட எட்டு வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை காலமானான். அதைத் தொடர்ந்து அடுத்த நாள் மேலும் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். நேற்று மேலும் இரு குழந்தைகள் அதே ஆசிரமத்தில் உயிரிழந்தது. 206 குழந்தைகள் வசிக்கும் அந்த ஆசிரமத்திற்கு மூன்றாவது மரணம் ஏற்படும் வரை மருத்துவ உதவி கிடைக்கவில்லை. இதற்கிடையில், அந்த நோய்க்காக சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷீஷ் சிங் இன்று தெரிவித்தார்.

இந்தியா 

10 குழந்தைகளுக்கு "இரத்த தொற்று" இருப்பதாக புகார் 

குழந்தைகள் அனைவரும் நகரின் அரசு சாச்சா நேரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நான்கு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இருக்கும் அறிகுறிகள் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதனால் ஏற்படும் அறிகுறிகளை போல் இருக்கின்றன. ஆனால், இதை பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் உறுதி படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "அடுத்த 48 மணிநேரங்களுக்கு ஆசிரமத்தை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணிப்போம். குழந்தைகளிடம் ஏதேனும் அறிகுறிகள் காணப்பட்டால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள்" என்று காவல்துறை கூறியுள்ளது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீரிழப்பு காரணமாக ஆபத்தான நிலையில் உள்ளனர். இதற்கிடையில், 10 குழந்தைகளுக்கு "இரத்த தொற்று" இருப்பதாகக் ஆசிரமத்தின் நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் இந்தக் கூற்று இன்னும் சரிபார்க்கப்படவில்லை.