இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழக முதல்வர்
இசைஞானி இளையராஜா தனது 80வது பிறந்தநாளினை இன்று(ஜூன்.,2) அவர் கொண்டாடி வருகிறார். இளையராஜாவின் உண்மையான பிறந்தநாள் ஜூன் 3ம் தேதி. அன்று தான் கலைஞர் கருணாநிதி அவர்களும் பிறந்துள்ளார். ஆனால் அந்த நாள் அனைவரும் கருணாநிதியை மட்டும் வாழ்த்த வேண்டும் என்னும் எண்ணம் கொண்ட இளையராஜா தனது பிறந்தநாளினை ஒரு நாளுக்கு முன்னதாக அவர் கொண்டாடி வருகிறார். கலைஞர் தமிழ் மொழிக்கு ஏராளமான சேவைகளை செய்துள்ளார். நான் அந்தளவு எதுவும் தமிழுக்கு செய்யவில்லை. அதனால் தான் இம்முடிவினை எடுத்தேன் என்று இளையராஜா ஏற்கனவே பலமுறை கூறியுள்ளார். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் இளையராஜாவிற்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மூத்த அமைச்சர்களும் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்
இதனையடுத்து இளையராஜாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்டோர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரின் அலுவலகத்திற்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இளையராஜாவிற்கு பொன்னாடை போற்றிய மு.க.ஸ்டாலின் அவர்கள் புத்தகம் ஒன்றினையும் பரிசாக அளித்தார். மேலும் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், காலைப்பொழுது இனிதாய் மலர-பயணங்கள் இதமாய் அமைய-மகிழ்ச்சிகள் அனைத்தும் கொண்டாட்டமாய் மாற-துன்பங்கள் அனைத்தும் தூசியாய் மறைய-இரவு இனிமையாய் சாய தமிழ்நாட்டின் தேர்வு 'இசைஞானி' இளையராஜா. அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை, நம் இதயங்களை வருடுகிறார் என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.