Loading...
பஞ்சாப் LPU பல்கலைக்கழகத்தில் வெடித்த போராட்டம், கட்டிடம் தீக்கிரை: மாணவி வன்கொடுமை வதந்தியால் வன்முறை
பஞ்சாப் LPU பல்கலைக்கழகத்தில் வெடித்த போராட்டம்

பஞ்சாப் LPU பல்கலைக்கழகத்தில் வெடித்த போராட்டம், கட்டிடம் தீக்கிரை: மாணவி வன்கொடுமை வதந்தியால் வன்முறை

எழுதியவர் Venkatalakshmi V
Sep 27, 2026
01:16 pm

செய்தி முன்னோட்டம்

பஞ்சாபில் உள்ள லவ்லி ப்ரொஃபெஷனல் பல்கலைக்கழக (LPU) வளாகத்தில், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியான உறுதிப்படுத்தப்படாத தகவலை தொடர்ந்து மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் அமைதியான முறையில் தொடங்கிய இப்போராட்டத்தில் வெளிநபர்கள் சிலர் ஊடுருவியதைத் தொடர்ந்து வன்முறை வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழக கட்டிடங்களுக்குத் தீ வைத்ததுடன், அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தினர். மேலும், ஒரு பிரிவு மாணவர்கள் ஜலந்தர் - ஃபக்வாரா தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

பின்னணி

போராட்டத்தின் பின்னணி

கட்டுமானத் தொழிலாளி ஒருவரால் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், பின்னர் கல்லூரி நிர்வாகம் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது அறைத் தோழி தெரிவித்ததாகவும் சக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து கேம்பஸ் முழுதும் பதற்றம் தொற்றிக்கொண்டது.

இந்த சம்பவம் குறித்துக் கபூர்தலா எஸ்பி கௌரவ் தூரா கூறுகையில், "பல்கலைக்கழகத்தில் இத்தகைய குற்றம் நடந்ததாகக் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் புகாரும் காவல்துறையிடம் பதிவு செய்யப்படவில்லை. தேசிய நெடுஞ்சாலை மறியல் குறித்துத் தகவல் அறிந்ததும் உடனடியாகச் சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தோம். மாணவர் அமைப்புகளுடன் பேசி உண்மை நிலை குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

அறிக்கை

பல்கலைக்கழக நிர்வாகம் அறிக்கை

எல்.பி.யு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை, தவறானவை மற்றும் வதந்திகளாகும். மாணவர்கள் எந்தவொரு அசம்பாவிதங்களிலும் ஈடுபடாமல், விடுதி அறைகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT