வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், இரண்டு நாட்கள் முன் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு ஆக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கு 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்: கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இன்று, இந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு வடமேற்காக நகர்ந்து, தெற்கு வங்கக்கடலின் மைய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறலாம். அடுத்த இரண்டு நாட்களில் இது மேலும் வலுவடைந்து தமிழ்நாடு, இலங்கை கரையை நோக்கி நகரும்.
Twitter Post
தமிழக மாவட்டங்களுக்கு 30ஆம் தேதி வரை மழை வாய்ப்பு
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் வரும் 30ஆம் தேதி வரை மிதமான மழை தொடர்ந்து பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கான 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலுார், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில், இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலுார், பெரம்பலுார், திருச்சி, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.