வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இரு தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதோடு கூடுதலாக தற்போது வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி உள்ளதாகவும், அதனால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அவர்கள் வெளியிட்ட அறிக்கைப்படி, "தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புதன்கிழமை ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது வடகிழக்கு திசையில் நகர்ந்து 24-ஆம் தேதி வாக்கில், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்".
4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை
#வானிலைசெய்திகள் | 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!#SunNews | #WeatherUpdate | #TNRains | #Rain pic.twitter.com/h6KWTfYl6D— Sun News (@sunnewstamil) May 21, 2024
அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
"22 மற்றும் 23ஆம் தேதிகளில், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், தேனி முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது". "தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது". "வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களிலும், அதற்கடுத்த மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது" எனத்தெரிவித்துள்ளது.